அய்யா வைகுண்டர்
அய்யா வைகுண்டர் 1809 இல் பொன்னுமாடன் நாடார் வெயிலால் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் மற்றும் அவருக்கு “முடிசூடும் பெருமாள்” என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அழகான பெயர்கள் சூட்டா அக்காலத்தில் அவர்ணர்களுக்கு உரிமை இல்லை மற்றும் உயர் சாதியினர்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்ற காரணத்தால் பின் "முத்துக்குட்டி" என்று பெயர் மாற்றப்பட்டது. முத்துக்குட்டி குழந்தை பருவத்தில் இருந்தே ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வந்தார். முத்துக்குட்டி தனது 24 வயதில் நோய்வாய் பட்டு நடக்க முடியாமல் முடங்கினார். அவரின் தயார் கடவுளுக்கு வேண்டி முத்துக்குட்டியை திருச்செந்தூர் "மாசி திருவிழாவுக்கு", நடக்க முடியாத நிலையில் தொட்டில் அமைத்து அதில் தூக்கி சென்றனர். அங்கு முத்துக்குட்டி ஞானம் பெற்று வைகுண்டராக மாறினார். வைகுண்டராக அவதரித்த அய்யா தனது ஆன்மிக பயணத்தை தொடர்ந்தார் மற்றும் அவர்ணர்களிடையே பிரசத்தியும் பெற்றார். அய்யா அவர்கள் சுவாமி தோப்பில் புதியதோர் மார்க்கத்தை தோற்றுவித்தார். பக்தர்கள் அதற்கு அய்யா வழி என்று பெயரிட்டனர்.
அய்யா தனது ஐந்து சீடர்களையும் பஞ்ச பாண்டவர்களின் பெயர்களாலேயே அழைத்து வந்தார். அய்யாவின் மேல் ஏற்றப்பட்ட காழ்ப்புணர்வின் காரணமாக சவர்ணர்கள் நேரம் பார்த்து முத்துக்குட்டி என்றொரு சாணான் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு சாதாரண மக்களை ஏமாற்றி வருகின்றான் என்று அவர்கள் அரசருக்கு அறிவித்தனர். அதுமட்டுமல்லாமல், அய்யா வைகுண்டரைக் கைது செய்யவும் அரசரைத் தயார் செய்தனர். கடைசியில் அய்யா அரசரால் கைது செய்யப்பட்டு 112 நாட்கள் சிறையில் இருந்தார். சிறையில் பல இன்னல்களுக்கு ஆளானார் அய்யா மற்றும் தனது சிறைவாசத்தின்போது கொலை முயற்சிகளும் நடந்தன.
அய்யாவின் சமூக புரட்சிக்கு உந்துதலாக அமைந்தது அவர் பிறந்த சுவாமி தோப்பு மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் நிலவிய சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளும் தீண்டாமையும் ஆகும்.
அன்றைய காலகட்டத்தில் திருவிதாங்கூரில் ஜமீன்தாரித்தனம் அதிகப்படியான அதிகாரத்தோடு மக்களைக் கொடுமைப்படுத்தியது. அதிலும் நிர்வாகத்தில் பங்கு கொண்டவர்களின் கொடூரமான பிரபுத்துவமும், ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளும் தன்மையும், சாதிக் கொடுமைகளும் தாண்டவமாடின. சவர்ணர்கள் என்றும் அவர்ணர்கள் என்றும் மக்களை இரண்டு பிரிவாகப் பிரித்தனர். பிராமணர்கள் (நம்பூதிரிகள்), நாயர்கள், வெள்ளாளர்கள் முதலியவர்களைச் சவர்ணர்கள் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கினர். நாடார், ஈழவர், பறையர், புலையர் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை அவர்ணர்கள் எனும் பிரிவில் இணைத்து அவர்கள் அசுத்தமானவர்கள் என்ற முத்திரை குத்தி சமூக உரிமைகளிலிருந்து விலக்கி வைத்தனர்.
நாடார்களும் ஈழவர்களும் நாயர்களிடமிருந்து பன்னிரண்டு அடி தூரம் விலகி நிற்க வேண்டுமென்பதே அன்றைய சட்டம். பிராமணர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்குமான தீண்டாமை தூரம் முப்பத்தியாறு அடிகளாகும். தலித்துகளுக்கோ இத்தீண்டாமை தூரம் அறுபது அடியாகும். ஏதோவொரு ஒடுக்கப்பட்டவன் அவனுக்கு விதிக்கப்பட்ட “தீண்டாமைத் தூரத்தை” மீறுவானேயானால் அவனது தலை உடலில் தங்காது. தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டி, அவர்கள் இடுப்பிற்கு மேல் ஆடை அணியக்கூடாது எனக் கடுமையான நிபந்தனைகளை விதித்தனர். அது மட்டுமல்லாது, “போ போ” என்ற ஓசையை எழுப்பியவாறே தாழ்த்தப்பட்டவர்கள் நாயர் இனத்தவர்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் நடமாடி வந்தனர். ஜமீன்தாரிகளை வரும் வழியில் காண நேர்ந்தால் அவர்ணர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒளிக்கவோ அல்லது மரம் கொடிகளுக்கிடையில் மறைந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவோ முயன்றனர். உயர்சாதியினர் தவிர பிற சாதியினர் குடை பிடிக்கக் கூடாது, செருப்பு அணியக் கூடாது, கிணறு, குளம், சாலை, சந்தை ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆண்கள் யாரும் மீசை தாடி வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்தால் அதற்குத் தனி வரி கட்ட வேண்டும் என்ற கொடிய நிலை நிலவியது. தாலி வரி, மாட்டு வரி, கருவி வரி, ஏணி வரி, மேனிப் பொன் வரி, முலை வரி, வலை வரி, மீன் பிடிக்க விவசாயம் செய்ய வரி என்று கிட்டத்தட்ட 317 விதமான வரிகள் மக்கள் மீது விதிக்கப்பட்டது. இந்தமாதிரி கொடுமைகளை கேள்விப்பட்டுத்தான் விவேகானந்தர் “சாதிப் பைத்தியங்கள் வாழும் பைத்தியக்கார விடுதி, கேரளம்” என குறிப்பிட்டார்.
அய்யாவின் சமுகப்புரட்சி
அய்யா சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை களைய தனது ஆன்மிக வழியில் "அய்யா வழி" என்னும் தரிசனத்தை முன்வைத்தார்.
சமத்துவ சமாஜத்தை
கம்யூனிச அறிக்கை வெளியிடுவதற்கு பத்து வருடங்களுக்கு முன்பே 1838 ல் அய்யா வைகுண்டர் “சமத்துவ சமாஜத்தை” தொடங்கினார். இதன் பிரதான நோக்கம் சமத்துவத்தை போதிப்பதும், ஒற்றுமையால் வலிமை பெறவும், கல்வியின் மூலம் அறிவாளிகளாக மாறவும் அவர் சாதாரண மக்களை அறிவுறுத்தினார். அதற்காகக் கிராமங்களில் மக்கள் ஒன்றாகக் கூடுவதற்காகத் பதிகளை உருவாக்கினார். அப்பதிகளைப் பள்ளிக்கூடங்களாகவும் செயல்படுத்தினார்.
சமபந்தி போஜனம்
சவர்ணர்களில் வெவ்வேறு வகையான இனமக்கள்கூட ஒன்றாய் அமர்ந்து உணவருந்த முடியாத காலமாக இருந்தது. அத்தகைய காலகட்டத்தில் அய்யா வைகுண்டர் உணவுப் பொருட்களுடன் சுவாமித்தோப்பிற்கு வருமாறு தனது அன்பர்களிடம் கூறினார். அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களை ஒன்றாகக் கலந்து வைத்து. பின்னர், அவ்வுணவை அகப்பையையோ கரண்டியையோ பயன்படுத்தாமல் உணவு பரிமாறுகிறவர்களின் கையால் பரிமாறும்படி கூறினார்.
பள்ளர், பறையர், புலையர், சாணார் உட்பட பெரும்பாலான சாதியைச் சார்ந்தவர்களும், அவர்களது உபசாதியைச் சார்ந்தவர்களும் சமமானவர்கள் என்னும் வண்ணம் உணவை உண்டனர். அவ்வாறு சாதி எனப்படும் கட்டுமானத்தின் அடிக்கல்லை முதன்மதலாகப் பெயர்த்து அய்யா வைகுண்டர் எறிந்தார். இன்றும், சுவாமித்தோப்பு அன்புவனத்திலும், ஏனைய பதிகளிலும், தாங்கல்களிலும் சமபந்தி போஜனம் முறையாக நடைபெற்று வருகின்றது.
துவையல் பந்தி
துவையல் பந்தி என்பது மனதின் சகல அழுக்ககளை மாற்றியும், பரஸ்பரம் வெறுப்புகளை அகற்றியும், சகோதர மனப்பான்மையையும் ஒற்றுமையையும் உருவாக்கும் நடைமுறை ஆகும். இதன் முதன்மையான நோக்கம் சவர்ணர்கள் கூறும் அவர்ணர்கள் அசுத்தமானவர்கள் என்பதை உடைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட முறையாகும்.
உத்தேசமாக எழுநூறு குடும்பங்களைச் சார்ந்த, பல்வேறு சாதி மக்கள் அய்யா நடத்திய துவையல் பந்தியில் கலந்து கொண்டனர். இது ஆறு மாதங்கள் தொடர்ந்தது. இதில் அவர்கள் கடலில் நீராடியதோடு தினமும் காலை, மாலை, சாயங்காலம் என மூன்று வேளையும் உடைகளைத் துவைத்துச் சுத்தமாக்கி அணிந்தும் வந்தனர். தினந்தோறும் மதிய உணவை மட்டுமே உண்டனர். சிறு பயறும் அரிசியும் கலந்து கடல் நீரில் வேக வைத்த கட்டிக் கஞ்சியே அவர்களது உணவாக இருந்தது. அதுமட்டுமல்லாது, ஏனைய சமூக பழக்க வழக்கங்களையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தினார். குளித்து வழிபாடு முடித்த பின்னரே உணவு உண்ண வேண்டும் என்னும் நிபந்தனை இன்றும் முறையாகத் தொடர்ந்து வருகிறது.
சைவமும் அமைதியும்
அய்யா புலால் உண்பதை எதிர்த்தார் மற்றும் சைவ உணவை உட்கொள்ளுவதால் உடலுக்கு மனதளவில் ஏற்படும் அமைதியையும், மாமிச உணவுகள் உண்பதன் மூலம் ஏற்படும் உடலுக்கு ஏற்படும் வலுவையும் அவர் உணர்ந்திருந்தார். அன்றைய மக்களில் பெரும்பான்மையானவர்கள் மாமிச உணவு உண்பவர்களாக இருந்தனர். திடீரென அனைவரும் சைவ உணவு உண்பவர்களாக மாற்ற முடியாது என்பதை அறிந்து. அதனால் வாரத்தில் இரண்டு தினங்கள் அதாவது, வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சைவ உணவுகளை மட்டும் உண்ணும்படி அவர் தனது அன்பர்களுக்கு உபதேசித்தார்.
வழிபாட்டு முறைகள்
சென்னை இராஜதானியிலும், திருவிதாங்கூரிலும் உள்ள எந்தவொரு கோவிலுக்குள்ளும் அவர்ணர்கள் செல்ல அனுமதியில்லை. இன்னும் கொடுமையாக, கோவில் தேர்கள் போகும் தெருக்களில்கூடச் சுதந்திரமாக நடந்து செல்லவும் அம்மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அய்யா சவர்ணர்களின் கோவில்களில் வழிபாடு நடத்தவும், பூஜைகள் மேற்கொள்ளவும் போகக்கூடாது என்று தனது அன்பர்களிடம் கூறினார். இதை உடைத்தெறிய புதியதோர் வழிபாட்டு முறையை முன்வைத்தார்.
அவர் கண்ணாடி வழிபாட்டு முறையை உலகில் முதன் முறையாக உருவாக்கினார். இறை என்பது ஒவ்வரிடமுமும் குடிகொண்டுள்ளது. எனவே தனதில் குடிகொண்டுள்ள பரமாத்மாவினை கண்ணாடி முன் நின்று தனதுருவில் தரிசிக்க வேண்டும் என்கிறார் அய்யா.
அய்யா உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்த்தார். தன்னுடைய உருவத்தை வரைந்து வழிபாடு மேற்கொள்ள முயன்ற தனது பக்தர்களிடம் அய்யா நான் உங்களில் குடி கொள்கின்றேன். உங்களுடைய உருவத்திலேயே என்னைத் தரிசித்தால் போதும். உங்களை எனது நிலைக்கு உயர்த்த வேண்டும். சுத்தமான மனிதர்களாக மட்டும் இருந்தால் போதும், இதைச் சாதிக்க முடியும் என்று கூறினார்.
அய்யா இந்த வழிபாட்டுக்கு நிழல்தாங்கல்களையும் பதிகளையும் நிறுவினார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பூசாரிகள் என்று பிரித்துவைத்த இடை சுவரை தனது வழிபாட்டு முறையின் மூலம் உடைத்தெறிந்தார். அதேசமயம் கடவுளின் பெயரால் விலங்குகள் பலியிடுவதை எதிர்த்தார்.
கண்ணாடி வழிபாட்டின்போது அய்யாவழி பக்தர்கள் தலைப்பாகை அணிவது வழக்கம். அதேபோல் பக்கதர்களுக்கு நாமம் இடுவது வழக்கம்.
அய்யாவின் "அகிலத்திரட்டு அம்மானை" என்பது அய்யா பிறப்பின் நோக்கத்தையும் மற்றும் "அய்யா வழி" முறைகளையும் விவரிக்கும் நூலாகும்.
பஞ்சப் பதிகள்
வழிபாட்டுக் தலங்கள் வடிவமைப்பில் சிறியனவாக இருக்க வேண்டும் என்றும், கோட்டை கொத்தளங்கள் கூடாதென்றும், அவற்றை நிறுவுவதற்காகப் பணத்தைத் தேவையில்லாமல் செலவழிக்கக் கூடாது என்றும் அய்யா வைகுண்டர் கூறினார்.
அது மட்டுமல்லாமல் அய்யா அன்பர்கள் அமைதியுடன் வழிபாடு மேற்கொள்ளும் வண்ணம் அவற்றின் சுற்றுப் புறங்கள் காணப்பட வேண்டும் என்பதிலும் அய்யா வைகுண்டர் கண்டிப்புடன் இருந்தார். சாதி, துணை சாதி என்னும் வேறுபாடுகள் இல்லாமலும், கடவுளுக்கும் பக்தனுக்குமிடையில் புரோக்கராக ஒரு புரோகிதனையும் வைக்காமலும், மனிதர்கள் கடவுளை வணங்குவதற்கான ஒரு பொது இடமே பதிகள். நூற்றாண்டுகளாக இருந்து வந்த மதத்தின் பெரிய சுவர்களைத் தகர்த்து, கடவுளின் பெயரால் தங்களது துன்பங்களை மறந்துபோகும் மக்களுக்கு அய்யா வைகுண்டர் அமைத்துக் கொடுத்த அற்புதமான ஆலயமே இந்தப் பதிகள்.
அய்யா வைகுண்டர் இவ்வாறு ஐந்து பதிகளை நிறுவினார். இவை “அய்யா வழி” பக்தர்களின் தீர்த்தா கேந்திரங்களாகத் திகழ்கின்றன. அவற்றின் தலைமைப் பதியாக சுவாமித் தோப்புப் பதி அமைகின்றது. ஏனைய நான்கு பதிகள் முட்டப்பதி, தாமரைகுளம் பதி, அம்பலப்பதி, பூப்பதி, போன்றவையாகும்.
தலைப்பாகையும் சுயமரியாதையும்
திருவிதாங்கூரில் முன்பு உயர்த்தப்பட்ட வகுப்பைச் சார்நதவர்கள் மட்டுமே தலைப்பாகையும், முட்டுக் கீழும், இடுப்புக்கு மேலும் ஆடைகள் அணியும் உரிமையைப் பெற்றிருந்தனர். பெரிய சுமைகளைச் சுமக்கும்போதுகூட அக்காலத்தில் அவர்ணர்கள் தலையில் துணி கட்டவோ, சும்மாடு வைக்கவோ உரிமை இல்லாதிருந்தது. அதற்குப் பதில் கொஞ்சம் வைக்கோலோ, பனையோலையோ, வாழைத்தாரோ மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அய்யா அவர்கள் தனது கண்ணாடி வழிபாட்டின் போது பக்தர்கள் தலைப்பாகை அணிந்து வழிபடும் முறையை முன்வைத்தார். ஆண்கள் தலைப்பாகையும், பெண்கள் தோள்ச்சீலையும் அணிந்து கொண்டு மட்டுமே தன்னிடம் வரவேண்டுமென்று அய்யா வைகுண்டர் கட்டளையிட்டிருந்தார். இந்த அடையாளங்களைச் சுயமரியாதையின் மகத்தான அடையாளங்களாக அவர் அறிவித்தார். இது தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்குக் காரணமாக அமைந்தது. அவரது காலத்தில் நடந்த தோள்சிலை போராட்டத்திற்கு இது உத்வேகம் அளித்தது.
அய்யா வழி திருமணம்
அய்யா வைகுண்டரின் தேவையற்ற திருமண சடங்குகளை களைந்து தமிழ் மொழியில் “கல்யாண வாழ்த்து" என்னும் மங்கள வாழ்த்து அய்யா வழி திருமணங்களில் பாடப்படுகிறது.
தனது வாக்கின்படி 1851 இல் நாற்பத்தி இரண்டாம் வயதில் அய்யா வைகுண்டர் மகா சமாதி அடைந்தார்.
இன்று அய்யாவின் நிழல்தாங்கல்கள்
தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, பெங்களூர், மும்பை, இலங்கை போன்ற பல இடங்களில் ஐயாயிரத்திற்கும் அதிகமாக நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிழல்தாங்களில் கண்ணாடி பிரதானமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருக்கும்.
Comments
Post a Comment