அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்
தத்துவம் என்பது அறிவியல், ஆன்மிகம், அரசியல் என பல தளங்களில் விரிவடைந்து விவாதத்திற்கு உட்படக்கூடியது. அதுபோல, அத்வைத தத்துவமும் ஆன்மிகம், அரசியல், அறிவியல் மற்றும் பல மேற்கத்திய தத்துவங்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அத்வைத தத்துவம் வாழ்க்கையில் மோட்சத்திற்கான (liberation) வழியாக சுயத்தை உணர்தல் என்ற ஞான தேடலை முன்வைக்கிறது. இந்நிலையில், இந்த ஞான தேடலின் சரியான அறிவை பெறுவதற்காக ஆறு பிரமாணங்களை அத்வைத வேதாந்தம் முன்வைக்கிறது. இந்த ஆறு பிரமாணங்கள் யதார்த்தத்தின் தன்மை, சுயம் மற்றும் non-duality ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படையாக செயல்படுகின்றன. அவை: 1. பிரத்யக்ஷம் (Perception): நேரடி உணர்வுகள் மூலம் பெறப்படும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. உதாரணம்: மரத்தை காணுதல், ஒலியை கேட்குதல் போன்ற அனுபவங்கள். இவை நமது புலனுணர்வுகளால் நேரடியாக அறியப்படும் அறிவாகும். 2. அனுமானம் (Inference): நடந்த நிகழ்வுகள் அல்லது அறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் ஒரு விஷயத்தை தர்க்கரீதியாக ஊகித்து புரிந்து கொள்வது. உதாரணம்: மலை மீது புகை காணப்படும்போது, அங்கு தீ இருக்கிறது என தெரிந்து கொள்வது. ...