யோகம்

இப்போது எல்லாரும் அறிந்த யோகா பயிற்சிகள் கூட இந்த யோகா தரிசனத்தில் இருந்து வந்ததுதான்.  இதுவும் பௌதிக தரிசனமாகும். இந்த யோகா தரிசனமானது சாங்கியதின் கிளையாக பரிணமித்து தனி தரிசனமாக மாறியது. யோகம் சாங்கியதின் மூன்று அடிப்படை கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டது(பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது, பிரபஞ்சத்தின் மூல காரணமும் பருப்பொருளேயாகும், முக்குணங்கள் சமநிலையை இழக்கும் போது ஆதி இயற்கை உருவாகுகிறது). இதனால் இதை சாங்கியதின் உப தரிசனம் என்றும் அழைப்பார்கள். 

முக்குணங்களில் பிளவு உண்டானதால்(சம நிலை இழந்ததால்) ஆதி இயற்கை(பிரபஞ்சம்) தோன்றியது. பிளவுபடாத(சமநிலையில் உள்ள) ஆதி இயற்கையை எப்படி நம்மால் அறிய முடியும் ? என்ற கேள்விக்கு சாங்கியம் பதில் அளிக்க முயன்ற போதுதான் யோகம் என்னும் தரிசனம் உருவாகியது.  நமது மனமானது காமம், குரோதம் மற்றும் மோகம் என்னும் தீய குணங்களால் மூடப்பட்டுள்ளது. இந்த தீய குணங்களை விடுத்து யோகா முறைகளால் மனதை தூய நிலைக்கு எடுத்து சென்றால் நாம் ஆதி இயற்கையை தரிசிக்க முடியும். யோகம் என்றாலே தூய அறிதல் என்று பொருள். 

ஐம்புலன்களும் மனமும் செயலற்றிருக்க அறிவு நிலைத்து நிற்கும் நிலையே யோகம் ஆகும். இந்த யோகா தரிசனத்தை தர்க்கரீதியாக விவாதித்து தொகுத்தவர் பதஞ்சலி ரிஷியாகும் மற்றும் இவர் கிமு  இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவராக இருக்கலாம். 

சாங்கியம் கூறும் 24 தத்துவங்களையும் யோகம் ஏற்கிறது. அதுமட்டும் அல்லாமல் யோகம் சாங்கியத்தின் புருஷ தத்துவத்தையும் ஏற்கிறது. மனிதன் காமம் குரோதம் மோகம் போன்ற தீய குணங்களால் இயற்கைக்கும் புருஷனுக்கும்(மனிதர்கள்) தொடர்பு இருப்பதாக ஒரு மாயை(அறியாமை) ஏற்படுகிறது. இந்த அறியாமை ஒருவனுக்கு அகன்றால் புருஷனுக்கும் இயற்கைக்கும் உறவு இல்லாமல் தன் தூய நிலையை அறிவான். இந்த நிலையே முக்தி என்று பௌதிக அடிப்படையிலான யோகா தரிசனம் சொல்கிறது.

ஐம்புலன்களையும் மனதையும் அடக்கி ஒருவன் தன் தூய நிலைக்கு போக பின்வரும் யோகத்தின் எட்டு படிநிலைகளை கடைபிடிக்க சொல்கிறது.

  1. யமம் (அடக்கம்)
  2. நியமம் (கட்டுப்பாடு)
  3. ஆசனம் (யோக முறையில் உட்காருதல்)
  4. பிராணாயாமம் (மூச்சைக் கட்டுப்படுத்தல்)
  5. பிரத்தியாகாரம் (புலனறிவை மறக்கடித்தல்)
  6. தாரணை (கவன ஈர்ப்பு)
  7. தியானம் (தியானம்)
  8. சமாதி (சமாதி)

இதில் யமம் என்பது அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரம்மசரியம், அபரிகிரகம் என்னும் ஐயம் பெரும் விரதங்களாகும்.

நியமம் என்பது சௌசம்(உடலையும் மனதையும் சுத்தப்படுத்துதல்), தபஸ்(பிடிவாதமாக நெறிகளை பின்பற்றுதல்), ஸந்தோஷம்(சகஜமான இனிய மனநிலை), ஸ்வாத்யாயம்(கல்வி) போன்றவையாகும்.

தூய உடல் மற்றும் தூய மனம் ஆகியவை யோகத்திற்கு அவசியம். இதுவே சீரான இயக்கம் உடைய உடல் பயிற்சின் முதல் தேவையாகும். இதையே யமம் மற்றும் நியமம் வலியுறுத்துகிறது.

மூன்றாவது படிநிலையான ஆசனம் என்பது சௌகரியமான ஆசன இருப்பையே கூறுகிறது.

நான்காவது படிநிலையான பிராணாயாமம் சுவாசத்தை சீராக விடுவதாகும். யோகாசனம் மூலம் வெளியுறுப்புகளையும் பிராணாயாமம் மூலம் உள்ளுறுப்புகளை துல்லியமாக வைத்திருப்பதை யோகம் வலியுறுத்துகிறது.

அடுத்த படிநிலையான பிரத்தியாகாரம் என்பது புலன்களை(கண், காது, மூக்கு, சருமம், நாக்கு) மூடிவிட்டு மனதை நோக்கி நமது கவனத்தை குவிப்பதாகும். புலன்களின் செயல்களில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த நிலைக்கு செல்வது இதன் அடுத்தகட்டமாகும்.

அடுத்த ஆறாவது படிநிலையில் தாரணை என்பது மன செயல்பாட்டினை ஒரு புள்ளியை நோக்கி குவிப்பதாகும். பொதுவாக மனதை மந்திரத்தில் குவிப்பதே வழக்கம். ஓம், க்ரீம், ஹம் போன்ற மந்திரங்கள் யோக பயிற்சியின் போது உச்சரிப்பதை காணலாம். இது மனதை ஒரு புள்ளியில் குவிக்க உதவும்.

ஏழாவது தியானம் என்பது முழு பிரக்ஞையையும் மெதுவாக குவிய வைப்பதே ஆகும்.

கடைசி படிநிலை சமாதி என்பது சித்தம் அடங்கி தியானிக்கும் நிலை ஆகும். இந்த நிலையில்தான் ஒருவன் தன் தூய நிலைக்கு போய் பிரகிருதியை அறிகிறான்(ஆதி இயற்கையை தரிசிக்கிறான்). இதுவே யோக மெய்ஞான நிலையாகும்.
 
இந்த யோக பௌதிக தரிசனத்தை பிற தத்துவங்கள் உள்வாங்கிக்கொண்டு அதை ஆன்மிக அடிப்படையிலான யோக முறையாக வளர்த்தெடுத்தன. உதாரணத்துக்கு அத்வைதம் யோகத்தின் மூலம் அறியாமையை களைந்து தூய நிலைக்கு செல்லும்போது ஒருவனுக்கு பிரம்மம் மட்டும் எஞ்சும் என்கிறது.

Comments