ஆரிய சமாஜம்
ஆரிய சமாஜம் சுவாமி தயானந்த சரஸ்வதிகளால் அவர்களால் 1875 இல் தொடங்கப்பட்ட இயக்கமாகும். எப்படி தென்பாரதத்தில் திருமாலினை அடிபணியும் அனைவரும் ஒரே சாதியினர் அவர்களுக்கிடையே வேறுபாடுகள் கிடையாது என்று ராமானுஜர் முன்வைத்தாரோ அதே வழியில் வடக்கில் உதித்தவர் தயானந்த சரஸ்வதிகள். இவரின் அடிப்படை கொள்கைகள் ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் சம்பிரதாய வேறுபாடுகளை களைந்து வேதகால மரபான சனாதன தர்மத்திற்கு திரும்பவேண்டும் என்கிறது. குணாதிசிய அடிப்படையிலான சதுர்வர்ணத்தை ஏற்கிறதே தவிர பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தையும் மற்றும் சாதிய கட்டமைப்புகளையும் ஏற்பதில்லை. இவரின் ஆரியா சமாஜம் சமூக தளத்தில் கலப்பு திருமணம், சமபந்தி போஜனம், சாதிய ஒழிப்பு, பிற மதத்திற்கு மாறிய ஹிந்துக்களை தாய் மதத்துக்கு திரும்ப செய்வது மற்றும் விக்கிரக வழிபாட்டு முறையை மறுப்பது என்று இயங்கிவருகிறது.
ஆரிய சமாஜம் வேள்வித் தீ வழியே அருவ வழிபாட்டுக்கு உகந்தது என்கிறது. இன்று ஹிந்துக்களிடையே உள்ள உருவ வழிபாடு, சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை விட்டுவிட்டு வேதகால சனாதன தர்மத்தை கடைபிடிக்க சொல்கிறது ஆரிய சமாஜம் மற்றும் இவை அனைத்தும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை, வேத நூல்களில் விக்கிரக வழிபாடு கிடையாது என்கிறது. ஆரிய சமாஜம் ஹிந்து சமய நூல்களை அர்ஷ், அனார்ஸ் என்று இருவகையாக பிரிக்கிறது. அர்ஷ் என்பது அனைத்துக்கும் பொதுவாக என்று பொருள் மற்றும் அனார்ஸ் என்பது குறிப்பட்ட அம்சத்தை குறிப்பது என்பது பொருள்.
அர்ஷ் என்ற தத்துவார்த்த நூல்கள் எந்த ஒரு தெய்வ வடிவத்தையும் துதிக்காமல் ஓம் என்று தொடங்குபவை. வேதங்கள் மற்றும் உப நிடதங்கள் இந்த வகையை சேர்ந்தவை.
அனார்ஸ் தத்துவார்த்த நூல்கள் ஓம் என்று சேர்த்து கொண்டு குறிப்பிட்ட தெய்வத்தை துதித்து தொடங்குபவையாகும்.
அர்ஷ் நூல்கள் பெரும்பாலும் ஸ்ருதிகளாக ஒலிவடிவிலும் சில எழுத்து வடிவிலும் இருக்கும். அனார்ஸ் நூல்கள் எல்லாமே ஸ்மிருதிகளாக எழுத்து வடிவில் இருக்கும். ஸ்ருதி மற்றும் ஸ்மிருதியில் முரண்பாடுகள் இருப்பின் ஸ்ருத்தியை பிரமாணமாக ஏற்று கொள்ளவேண்டும் என்று ஸ்மிருதியில் கூறப்பட்டள்ளது. எனவே அர்ஷ் வேத நூல்களையே ஹிந்துக்கள் தமது சமய மற்றும் சமூக வழிபாட்டுக்கு எடுத்து கொள்ளவேண்டும் என்றும் ஆரிய சமாஜம் கூறுகிறது.
தயானந்த சரஸ்வதிகள் வேத நெறிகளுக்கான விளக்கங்கள் மற்றும் உபதேசங்களை தனது குருவான விரஜானந்தரிடம் இருந்து கற்று கொண்டார். ஹிந்து மதத்தில் உள்ள பல்வேறு விக்கிரக வழிபாடுகள், சமயங்கள் மற்றும் ஏற்றுதாழ்வுகள் பிற ஆபிரகாமிய மதங்களின் மத மாற்றத்திற்கு ஏதுவாக அமைகின்றன. எனவே ஹிந்துக்கள் தங்கள் வேறுபாடுகளை களைந்து வேத மரபுக்கு திரும்ப வேண்டும் என்று முன் வைத்தனர் குருவும், தயானந்த சரஸ்வதிகளும். இந்த விக்கிரக வழிப்பாட்டை எதிர்த்து வேத மரபை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரஜானந்தர் குரு தட்சணையாக சீடரிடம் கேட்டார் மற்றும் தயானந்த சரஸ்வதிகளும் அதை மகிழ்வுடன் ஏற்று கொண்டு தனது சமய பணியை தொடங்கினார்.
பாரதம் போன்ற ஆன்மிக சமூகத்தில் ஆன்மிகவாதிகள், சன்யாசிகள், மடாதிபதிகள் மற்றும் பண்டிதர்களை விவாதித்து வென்றாலே தனது கோட்பாட்டுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று உணர்ந்த சரஸ்வதிகள். பாரதம் முழுக்க பயணம் செய்து மடாதிபதிகளையும், பண்டிதர்களையும் வென்று வேத மரபு சார்ந்த பாடசாலைகளை நிறுவினார். இவருடன் விவாதத்தில் தோற்றவர்கள், பண்டிதர்கள், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத தலைவர்களிடம் இருந்து தயானந்த சரஸ்வதிகள் ஒரு நாத்திகர் என்று எதிர்ப்பு கிளம்பியது. அன்றைய காலகட்டத்தில் வட மாநிலங்களில் மிஷனரிகளின் மத மாற்றத்துக்கு பெரும் தடையாக இருந்தது ஆரிய சமாஜம் தான் மற்றும் பெருமளவு பிற்படுத்த மக்களை உள்வாங்கியது. கடைசியில் 1883 இல் ஜோத்பூர் மன்னரின் ஆசைநாயகி நன்னி ஜானை எதிரிகள் பயன்படுத்தி அவருக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்தனர். அதனால் கடும் வயிற்று வலிக்கு உள்ளான தயானந்த சரஸ்வதிகள் சிகிச்சை பலனின்றி சில வாரங்கள் கழித்து இறந்தார்.
ஆரிய சமாஜத்தின் சமூக சீர்திருத்தங்கள்
நாடு முழுவதும் ஆரிய சமாஜத்தின் DAV என்ற தயானந்த ஆங்லோ வேதிக் பள்ளிகள் நிறுவப்பட்டு இயங்கிவருகின்றன.
1924 இல் பார்ப்பனரான மேதாதி என்ற ஆரிய சமாஜி தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்ணை கலப்பு திருமணம் செய்துகொண்டார். இன்றும் ஆரிய சமாஜம் கலப்பு திருமணங்களுக்குக்கான matrimonial வலைத்தளம் தொடங்கி கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கின்றன.
வட மாநிலங்களில் பல இடங்களில் தீண்டாமையை எதிர்த்து பலமாக பிரசாரம் செய்தது. 1928 இல் பிஜனோரில் ஆரிய சமாஜ்வாதியான தாகூர்தாஸ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட சக்கிலிய சாதியினர் தீண்டாமையை எதிர்த்து ஆரிய சமாஜத்தில் சேர்ந்தனர். ஆரிய சமாஜிகள் அவர்களுக்கு பூநூல் அனுவித்து அவர்களுடன் சமபந்தி போஜனம் விருந்து நடத்தினர். 1923 இல் காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய ஆரிய சமாஜி பண்டித ராமச்சந்திரர் ஜாதி இந்துக்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
1913 இல் அண்ணல் அம்பேத்கர் பரோடாவில் வேலைக்கு சேர முடிவெடுத்தார். குஜராத்தில் அப்போது அவர் தாழ்த்தப்பட்டவர் என்று காரணத்தால் ஆரிய சமாஜத்தின் ஓய்வு அறையை தவிர வேறுயெங்குமே அம்பேத்கருக்கு தங்க அறை கிடைக்கவில்லை.
ஆரிய சமாஜியான சுவாமி சிரத்தானந்தர் ஆறுகோடி தீண்டத்தகாதவர்கள் முழு அளவில் ஹிந்துக்களாதவரை பாரதம் சுதந்திரம் அடையாது என்று கூறினார். இவரின் தலித்திய சமுக செயல்பாடுகளை பார்த்து காந்தி தனது ஹரிஜன இயக்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டார்.
ஆரிய சமாஜத்தின் முக்கிய சமய பணியாக வேற்று மதங்களில் உள்ள ஹிந்துக்களை தாய் மதம் திரும்ப செய்யும் நிகழ்வாக சுத்தி என்ற சடங்கு நடத்தப்படுகிறது. ஆரிய சமாஜம் சாதியை ஏற்காது மற்றும் அப்படி தாய் மதம் திரும்புபவர்கள் ஹிந்துமதத்தின் எந்த சாதியிலும் சேராமல் அவர்கள் ஆரிய சமாஜியாவாதிகள் என்றே அறியப்படுவர். அவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் அளிக்கப்படும். 1907 to 1910 வரை ராஜஸ்தானில் கடந்த காலத்தில் வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதமாற்றப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராஜபுத்திரக் குடும்பங்கள் தங்களை சுத்தி சடங்கு செய்துகொண்டு தாய்மதம் திரும்பினர். 1921-1924 இல் கேரளாவில் மாப்ளா கலவரத்தின்போது பல ஹிந்து குடும்பங்கள் பலவந்தமாக இஸ்லாமுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் கலவரம் ஒடுக்கப்பட்டபின், ஆரிய சமாஜம் அவர்களுக்கு கைகொடுத்து, சுத்தி சடங்கு செய்து தாய் மதம் திருப்பியது.
ஆரிய சமாஜம் அனைவருக்கும் வேத மந்திரங்களை சொல்லிக்கொடுத்து தாங்களே வேள்வித் தீ வளர்த்து அந்த சடங்குகளை செய்ய பயிற்சி அளிக்கிறது. வேதம் ஓதவும் வேள்வித் தீ வளர்க்கவும் அந்தணர் தேவையில்லை என்கிறது ஆரிய சமாஜம்.
இந்த மண்ணில் சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்து தான் சொல்வதை தனது வாழ்க்கையில் செய்து காட்டியவர்கள் ராமானுஜர், தயானந்த சரஸ்வதிகள், வைகுண்டர் மற்றும் காந்தி போன்ற ஆன்மிக வாதிகளே.
Comments
Post a Comment