கம்யூனிசம்

பொதுவுடைமை என்பது தனிச்சொத்துவுடமையை உடைத்து சமூக வளங்கள் மற்றும் உற்பத்தி ஆகியவற்றை சமமாக பங்கிட்டு கொள்வது. கம்யூனிசம் என்பது  எல்லாவற்றையும் பாட்டாளி மற்றும் முதலாளி என்று வர்க்க அடிப்படையில் அணுக கூடிய சித்தாந்தம். இந்த முதலாளித்துவதில் நிலவும் வர்க்க முறைதான் பாட்டாளி vs முதலாளி. இந்த முதலாளித்துவதால் கட்டமைப்பட்ட ஜனநாயக அரசு தனி நபர் ஒருவர் மூலதனம், நிலம் மற்றும் அனைத்துவிதமான உடமைகளை வாங்க விற்க அனுமதிக்கின்றன மற்றும் இந்த முதலாளித்துவ கட்டமைப்புதான் தனிச்சொத்துடைமை என்றழைக்கப்படுகிறது. இதனால்  நாட்டின் உடமைகள் அனைத்தும் ஒரு சிறு கூட்டமான முதலாளிகளிடமும் மற்றும் தனது உழைப்பை மூலதனமாக வைத்து வாழும் எந்த ஒரு இலாபமும் பெறாத ஒரு பெரும் கூட்டமாக பாட்டாளி வர்க்கம் திகழ்கிறது. இந்த பெரும் கூட்டமான பாட்டாளி வர்க்கம் தங்களை தங்களின் அடிமைமுறையில் இருந்து விடுவித்து புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடித்து அனைத்து உடமைகளையும் அரசுடமை ஆக்கி சமமாக பங்கிட்டு கொள்ளவதுதான் கம்யூனிசம். 

ஒரு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அடிமை முறை ஆகியவை மூலதனம் மற்றும் அதன் உற்பத்திமுறையை சார்ந்தே இருக்கின்றன..  ஆகவே மூலதனம் மற்றும் அதன் உற்பத்தியால் உருவாகும் உபரி உற்பத்தியை ஒரு கம்யூனிச அரசு முறையாக கையாண்டால் அந்த சமூகத்தில் உள்ள அடிமைமுறையை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும்.. உதாரணத்துக்கு முதலாளி ஒருவர் ஒரு தொழிலாளியை ஒரு நாளைக்கு 1000 என்று ஊதிய அடிப்படையில் வேலைக்கு அமர்த்துகிறார்.. அந்த தொழிலாளி ஒரு நாளைக்கு 10 காலணிகளை தயாரிக்கிறார் மற்றும் ஒரு காலணியின் விலை 400 வைத்து கொள்வோம். ஆக ஒரு நாளைக்கு மொத்தம் 4000 மதிப்புள்ள காலணிகளை உருவாக்குகிறார். இதில் மூல பொருட்கள், மெஷின் தேய்மானம், வரி மற்றும் கூலி என்று அனைத்தையும் கழித்துவிட்டால்  (4000 - 1000(கூலி) - 2000(மூல பொருட்கள், வரி மற்றும் தேய்மானம்) = 1000) 1000 ஒவ்வரு நாளைக்கு உபரி உற்பத்தியாக அந்த முதலாளி பெறுகிறான்.. இப்போது அந்த உபரி உற்பத்தியை சுழற்சியாக முதலீடு செய்வதால் அவன் அதிகப்படியான பாட்டாளிகளை அடிமைப்படுத்துகிறான் மற்றும் அவன் மேலும் அதிகப்படியான உடமைகளை(தனக்கு தேவையானது போக பொருட்களை) பெறுகிறான். பாட்டாளியோ தனது வாழ்கை தேவைக்கு உழைப்பை மூலதனமாக செலவிடுகிறான்.. இப்போது இந்த மூலதனம், உற்பத்தி கருவிகள் மற்றும் அதனால் உருவான உபரி சமூகத்தில் நிரந்திரமாக வர்க்க அடிப்படையில் முதலாளித்துவத்தை நிலைநாட்ட உதவுகிறது.. இதை உடைக்க அரசு மூலதனம், உற்பத்தி கருவிகள் மற்றும் வளங்களை அரசுடமை ஆக்கிவிட்டு மற்றும் அதன் மூலம் உருவாகும் உபரி உற்பத்தியை முறையாக கையாண்டால் வர்க்க மற்றும் அடிமை முறைகள் சமூகத்தில் ஒழியும். 

இச்சமூகத்தில் நிலவிய நான்குவித சமூக நிலைகள் மற்றும் உற்பத்தி உறவுகளால் ஏற்பட்ட சமூக மாற்றங்களை பார்ப்போம்(ஆதி பொதுவுடமை, அடிமைவுடைமை, நிலவுடமை, முதலாளித்துவம்).

ஆதி பொதுவுடமை சமூகம்

இது மனிதன் விலங்குகளை வேட்டையாடி காட்டில் வாழ்ந்த காலம்.  இதில் மனிதன் குடும்பம் இல்லாமல் குழுக்களாக வாழ்ந்தான்..  அவன் கல்,  அம்பு என்ற பொருட்களை வைத்து வேட்டையாடினான் மற்றும் தனக்கு என்று உடமைகள் எதுவும் வைத்து கொள்ளவில்லை. இதையே ஆதி பொதுவுடைமை அல்லது புராதன பொதுவுடமை சமூகம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆண்கள் வேட்டையாடவும் பெண்கள் விவசாயமும் செய்தனர். முதலில் இது பெண் வழி சமூகமாகத்தான் இருந்தது.. வேட்டையாடுவதை விட விவசாயம் போதிய உணவை தர..  ஆண்கள் வேட்டையாடுவதுவதை விடுத்து  விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அதே சமயம் வேட்டையாடுதல் மற்றும் வேளாண் உற்பத்தி கருவிகளில் மாற்றம் ஏற்பட்டது. கோடரி மற்றும் கத்தியும் உருவாகின.. இந்த உற்பத்தி கருவிகள் மற்றும் உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அடிமைத்தனத்துக்கு வழிவகுத்தது. இன குழுக்கள் உருவாகின மற்றும் பெண்கள் விவசாயத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆண்களுக்கு அடிமையாக்கப்பட்டனர். பெண் வழி சமூகத்தில் இருந்து ஆண் வழி சமூகமாக மாறியது.. 

அடிமைவுடைமை சமூகம்

விவசாயத்தில் ஈடுபட்டவனுக்கு உபரியும்(தேவைக்கு அதிகமான) கிடைத்ததால். முழுநேரமும் விவசாயத்தில் ஈடுபடாமல் பிற பொழுது போக்கு மற்றும் பிற உற்பத்தி கருவிகள் செய்வதிலும் ஈடுபடுகிறான். அதே சமயம் விவசாயத்தை பெருக்க அதிகப்படியான விளை நிலமும் மற்றும் அதை பண்படுத்தி விவசாயம் செய்ய அதிக படியான அடிமைகளும் தேவைப்பட்டன. அப்போது அதிக படியான உற்பத்தி கருவிகளை கொண்ட இனம் போரிட்டு மற்ற இனங்களை அடிமைப்படுத்தின.  இதில் உற்பத்தி கருவிகள் இல்லாதவர்கள் அடிமைகளாகவும் மற்றும் உள்ளவன் ஆண்டையன் ஆனான். இச்சமூகத்தில் அடிமைகளையே பிரதான உடைமைகளா கருதப்படுகிறது.. இதுதான் முதல் வர்க்க வேற்றுமை. 

இப்படி அடிமைப்படுத்தப்பட்டவர்கள் விவசாயம்,  சுரங்கம் மற்றும் கட்டிட வேலைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டனர். காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக்கப்பட்டன மற்றும் அதை ஒட்டி குடியிருப்புகள் உருவாகின. அடிமைகளை வாங்க விற்க அனுமதிக்கப்பட்டன. போர் கருவியின் உற்பத்தியில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆண்டைகள் போரிட்டு தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தினான் மற்றும் ஆண்டைகளே பின் அரசர்கள் ஆனார்கள். பல தொழில்கள் மற்றும் பண்ட மாற்று முறைகள் உருவாகின. இதே சமயத்தில் இந்தியாவில் தொழில்கள் அடிப்படையில் சாதிகள் உருவாகின.. 

நிலவுடமை சமூகம்

உற்பத்தி மற்றும் வேளாண் கருவிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அடிமைகளின் வேலைகளை குறைத்தன. அதே சமயம் ஆண்டைகளிடம் இருந்த அதிக படியான அடிமைகளை நிர்வகிப்பதில் சிக்கல் இருந்தது. எனவே பெரும் அரசர்களுக்கு கீழ் பல படிநிலைகள் உருவாக்கப்பட்டன மற்றும் அடிமைகளுக்கு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டன. அடிமைகள் போர் வீரர்களாக சேர்த்து கொள்ளப்பட்டனர். படை வீரர்கள்,  தளபதிகள் மற்றும் அமைச்சர்களுக்கு தங்களுக்கு எல்லைக்கு உட்பட்ட நிலங்களை விவசாயத்திற்காக கொடுக்கப்பட்டன..  பின்னர் இதிலிருந்து பண்ணையார்களும் பண்ணை அடிமைகளும் உருவாகினர். இந்த நிலத்தை உடமையாக கொண்டு இயங்கிய சமூகமே நிலவுடமை எனப்படுகிறது. இச்சமூகத்தில் பல கைத்தொழில்கள் உருவாகின. விவசாயம் மற்றும் பிற தொழில்களால் உருவான பண்டங்களை விற்க வணிகர்கள் உருவாகினர். இச்சமூகத்தின் கடைசி கட்டத்தில் இயந்திர உற்பத்திகள் உருவாகின. ஆடைகள் இயந்திர உற்பத்தியின் மூலம் தொழிற்சாலைகளில் உருவாகின. இந்த புதிய உற்பத்தி கருவிகளில் (இயந்திரங்கள்) ஏற்பட்ட மாற்றங்கள் தொழிற் புரட்சிக்கும் மற்றும் தனி சொத்துடைமைக்கும் வித்திட்டது..

தனிச்சொத்துடைமை சமூகம்

புதிய உற்பத்தி இயந்திரங்களால் பெரு உற்பத்தி ஏற்பட்டது மற்றும் தொழிற்சாலைகள் உருவாகின. இயந்திர உற்பத்தியில் உருவான பொருட்களின் விலை கைத்தொழிலால் செய்பட்ட பொருட்களை விட மலிவாக இருந்தன. இதனால் சிறு தொழில்கள் முடிவுக்கு வந்தன. இப்போது முதலாளி மற்றும் பாட்டாளி என்ற புதிய வர்க்கம் உருவாகியது. ஆனால் பாட்டாளிகள் பண்ணை அடிமை முறையில் இருந்து வேறுபட்டு இருந்தனர்.  பண்ணை அடிமைகளுக்கு உணவு, உடை மற்றும் தங்கும் இடம் நிலபிரபுக்கள் கொடுத்தனர்.  பாட்டாளிகளுக்கு தங்களின் உழைப்புக்கு காசு கூலியாக  கொடுக்கப்பட்டது. இந்த புதிய முதலாளித்துவ வர்க்கமுறையில் உள்ள முதலாளிகள் ஜனநாயக அரசை உருவாக்கினர் மற்றும் அரசுகளை தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கவும் வழி செய்தது. பாட்டாளிகளுக்கு அதிக சுதந்திரங்கள் கொடுக்கப்பட்டன பண்ணை அடிமைகளை விட. இந்த புதிய வர்க்க முறையில் ஒவ்வருவரும் நிலம், மூலதனம் மற்றும் உற்பத்தி கருவிகளை வாங்க விற்க அனுமதிக்கப்பட்டது. 

ஆனால் இந்த புதிய வர்க்க முறையில் அதிக அளவு தொழிலாளிகள் தொழிற்சாலையில் வேலை செய்வதற்கு தேவைப்பட்டன. ஆனால் பெருமளவு பண்ணை அடிமைகளாக இருந்ததால்.  அவர்களை பண்ணை முறையில் இருந்து விடுவிக்க தங்களின் புதிய அரசின் மூலம் நிலவுடமை மற்றும் அரசாட்சியை முடிவுக்கு கொண்டு வந்து அடிமைகளை விடுவித்தனர் முதலாளிகள். அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு பாட்டாளிகளாக மாறினார். 

இப்படி சமூகங்களை உற்பத்தி அடிப்படையில் பகுப்பாய்வு செய்வது மார்க்சிசம் எனப்படுகிறது. இதுவே வரலாற்று பொருள்முதல்வாதம் என்றும் அழைக்கபடுகிறது.  

சில சமூக மற்றும் அரசியல் சார்ந்த கம்யூனிச நிலைப்பாட்டை பார்ப்போம்

கம்யூனிசம் தேசியத்தை ஏற்குமா ?

ஏற்காது மற்றும் அதன் பெரு உற்பத்தியானது உலகமயமாக்கல் என்பதை நோக்கி நகர்வதால் சர்வதேசியமே அதன் நிலைப்பாடு.

நிலவுடமை சமூகத்தில் கம்யூனிஸ்ட்கள் எந்த நிலைப்பாட்டில் இருக்கவேண்டும் ?

நிலவுடமை சமூகத்தில் நிலவும் அடிமைமுறைகளை ஒழிக்கும் வரை முதலாளிகளுக்கும் மற்றும் தொழிற் வளர்ச்சிக்கும் சாதகமாகவும்  இருக்கவேண்டும். தொழிற்துறை வளர்ந்து நிலவுடமை முடிவுக்கு வந்த பின் பாட்டாளிகளுக்கு சாதகமாக இருந்து முதலாளித்துவத்துக்கு எதிராக ஆட்சியை கைப்பற்ற வேண்டும்.

ஒரு கம்யூனிஸ்ட் எப்படி வாழ வேண்டும் ?

ஒரு கம்யூனிஸ்ட் தன் சொத்துக்களை அரசுடமை அல்லது கட்சிக்கு கொடுத்துவிட்டு கம்யூன் வாழ்க்கை வாழ வேண்டும். ஆட்சியை பிடிக்கும் வரை தொழிற்சங்கங்கள் மூலம் பாட்டாளிகளை அரசியல் படுத்தி ஒன்றிணைக்க வேண்டும். இந்த கம்யூன் வாழ்க்கை என்பது காந்தியின் சபரிமதி ஆசிரமம் மற்றும் ஓஷோவின் கம்யூன் போன்றது.

குடும்பங்கள் பற்றிய கம்யூனிச நிலைப்பாடு என்ன ?

குடும்பங்களே பூர்ஷுவாக்களின் கட்டமைப்பு என்பதால் அதை எதிர்க்கிறது மற்றும் கம்யூன் வாழ்க்கை முறையை வலியுறுத்துகிறது. அதே சமயம் பொருளாதாரரீதியில் மனைவி கணவனை சார்ந்திருப்பதையோ மற்றும்  குழந்தைகள் பெற்றோரை சார்ந்து இருப்பதையோ எதிர்க்கிறது.

பெண்ணியம் பற்றிய கம்யூனிச நிலைப்பாடு?

கம்யூனிசம் வர்க்கங்கள் அடிப்படையிலேயே பார்ப்பதால் பாலின பாகுபாடு கிடையாது. அதே சமயம் பெண்ணியத்தையோ(பெண் ஆதிக்கத்தையோ) மற்றும் பெண் அடிமைத்தனத்தையோ அது ஏற்காது. பெண்கள் பொருளாதாரம் அடிப்படையில் யாரையும் சார்ந்து இல்லாத நிலைக்கு வழி வகுக்கிறது. 


Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்