பண்ணை அடிமைகள்

"பண்ணை அடிமைகள்" என்னும் இந்நூலை கொல்லால் எச். ஜோஸ்
1860ம் ஆண்டு வாக்கில் தஞ்சாவூரை சுற்றி கிராமம் ஒன்றில் நிலவிய நிலவுடமை சமூகத்தின் பண்ணை அடிமை முறையை வரலாற்று சான்றுகளின் அடிப்படையில் புனைந்து எழுதியுள்ளார். ஜோஸ் அந்த  கிராமத்தில் நிகழ்ந்த அடிமைமுறை நிகழ்வுகளை தனது எழுத்துக்களால் நாம் கண் முன்னே நிறுத்துகிறார். நான் இதில் உள்வாங்கியது கதையைவிட நிலவுடமை சமூகத்தில் நிலவிய அடிமைகளின் வாழ்க்கை முறையும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளும் தான். அவற்றில் சிலவற்றை பட்டியலிடுகிறேன். 

சூரியன் உதிப்பதில் இருந்து மறையும்வரை அடிமைகள் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர் மற்றும் வாரத்தின் ஏழு நாளும் உழைக்கவேண்டும்.

அடிமைகளின் பிள்ளைகள் ஆணென்றாலும், பெண்ணென்றாலும் எட்டு வயதுவரையேனும் ஆடைகளின்றிச் சுற்றித் திரிவதே வழக்கம்.

அடிமைகளின் பிள்ளைகள் 10 வயதை தொட்டுவிட்டால் ஆண்டையனின் வீட்டு வேலைக்கு செல்ல வேண்டும் மற்றும் வயது 14 நிறைவு பெற்றவுடன் அவர்கள் வீட்டு வேலையில் இருந்து வயல் வேலைக்கு நகர்த்தப்படுவர். 

அடிமைகள் தங்கள் கல்யாணத்திற்காக  ஆண்டையிடம் இருந்து பணம் பெறும் போதே தனக்கு பிறக்கும் குழந்தையும் ஆண்டையின் அடிமை என்று கைநாட்டு வாங்கியே பணம் கொடுக்கப்படும்.

அடிமைகளில் திருமணமான புதுப்பெண் தன் முதல் நாள் இரவை தனது ஆண்டையுடன் கழிக்க வேண்டும்.

வேலைக்கு போக தாமதம் ஆனாலோ அல்லது உடம்பு சரியில்லை என்று போகாமல் இருந்தாலோ அவர்களுக்கு பண்ணையாரின் தலையாரியின் மூலம் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. ஆண்களாக இருந்தால் சவுக்கடியும், பெண்ணாக இருந்தால் அரைநிர்வாணமாகவும் வேலை செய்யுமிடத்தில் தண்டனை வழங்கப்பட்டது. அதேபோல் சாணிப்பால் குடித்தல், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி மொட்டையடித்து கழுதை மேல் ஏற்றுதல் மற்றும் சில தவறுகளுக்கு கை கால்கள் வெட்டப்பட்டன.  அதேபோல் ஆண்டையால் தண்டனைக்கு உட்பட்டவருக்கு உதவவோ அல்லது அவர்களுக்காக பரிதாபப்பட்டு அழுகவோ கூடாது. அப்படி மீறினால் அவர்களுக்கும் தணடனை வழங்கப்படும்.

அடிமைகளில் உள்ள தாழ்ந்த சாதிக்காரர்களுக்கு நாவிதர்கள் சவரம் செய்யவோ, முடி வெட்டவோ வரமாட்டார்கள். ஆகவே அவர்களே அவர்களுக்குள்ளாக கண்ணாடித்துண்டுகள் இன்னும் இது போன்ற கூர்மையான பொருட்களால் தங்களுக்குள் மாறி மாறி வந்தது பாதி வராதது மீதியாக சவரமும் முடியும் வெட்டிக் கொள்வார்கள்.

அடிமைகள் தற்கொலை செய்து கொள்வது பாவ செயலாக பார்க்கப்பட்டது. மீறி தற்கொலை செய்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று போதிக்கப்பட்டது.

1861 க்கு முன்பு வரை அடிமைகளை ஆட்டு மந்தைகள் போல் பண்ணையார்களால் வாங்கவும் விற்கவும் பட்டனர். 1833 ஆம் ஆண்டு பிரிட்டன் பாராளுமன்றம் அடிமை வியாபாரத்தை தடை செய்து சட்டம் பிறப்பித்தது. அதன்பின் 1861 இல் வெள்ளை அரசாங்கம் இந்தியாவில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு தண்டனைக் கடுமையாக்கப்பட்டது. அதற்கடுத்து அடிமைகள் சுதந்திரம் பெற்று பண்ணை அடிமையில் இருந்து  கூலியாகினர். 



Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்