ராஜாராம் மோகன்ராய்
சதி என்னும் உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தவர் ராஜாராம் மோகன்ராய். "நவீன இந்தியாவை உருவாக்கியவர்" என்றும் அழைக்கப்படுகிறது. இவர் 1772 இல் மேற்கு வங்கத்தில் ஹூக்ளி என்னும் மாவட்டத்தில், ராம்காந்தோ ராய், தாரிணி தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். பிராமணிய குடும்பத்தில் பிறந்த மோகன்ராய் வேதங்களையும், உபநிஷங்களையும் முறையாக கற்றறிந்தபோதிலும் உருவழிபாட்டை கடுமையாக எதிர்த்தார் மற்றும் வேதங்கள் உருவ வழிபாட்டை பற்றி எங்கும் குறிப்பிடவில்லை என்று வாதிட்டார். பெற்றோர்களோ உருவவழிபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். கடைசியில் தந்தையிடம் வாதிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
வீட்டை விட்டு வெளியேறிய அவர் இமயமலையில் வழியறியாமல் அலைந்துத் திறிந்து, திபெத் சென்றார். அங்கு பௌத்தர்கள் தலாய் லாமாவை பூஜிப்பதை(உருவ வழிபாடு செய்வதை) கண்டு அதை எதிர்த்தார். அவரின் பிரச்சாரங்களால் பௌத்தர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அவர் வீடு திரும்பினார் மற்றும் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு வாரணாசி சென்ற அவர் வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இந்துமத தத்துவங்களை மிக ஆழமாகப் பயின்றார். 1803ல் அவரது தந்தை இறந்தவிடவே அவர் மூர்ஷிதாபாத்திற்குத் திரும்பினார். பின்னர் கொல்கத்தாவில் உள்ள ஒரு வட்டிக்கடையில் பணியாற்றினார். 1809 முதல் 1814 வரை அவர் கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.
ராம்மோகன் "வேதாந்த சாரம்" என்னும் நூலை எழுதினார். பின்னர் அந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. உருவ வழிபாடு பற்றி நம் சாத்திரங்களில் ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறினார். அவர் கருத்துக்களால் பிராமணர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது மற்றும் அவரை நாத்திகர் என்றும் சாடினார்.
சமூகத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டு வெகுண்டெழுந்த அவர் 1814ல் சமுதாய மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சியாக ‘ஆத்மிய சபை’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். பின்னர், பெண்கள் உரிமைக்காகவும், விதவைகள் மறுமண உரிமைக்காகவும், பெண்களுக்கான சொத்து உரிமைக்காகவும், பல பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அவர் அக்காலத்தில் பெண்களுக்கு கட்டாய பழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறுதல் மற்றும் பலதார மணம் புரிதல் போன்ற நடைமுறைகளைத் தீவிரமாக எதிர்த்தார்.
மோகன்ராய் ஆங்கிலம், பிரென்ச், இலத்தீன், கிரேக்கம், இபிரு, இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளை அறிந்தவர் மற்றும் ஆங்கில கல்வி மூலமே வெளியுலக அறிவை பெற முடியும் என்று நம்பினார். 1822ம் ஆண்டு ஆங்கில வழி கல்வி கொண்ட பள்ளி ஒன்றை நிறுவினார்.
1828ல், ராஜாராம் மோகன்ராய் அவர்கள் ‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை நிறுவினார். ‘கடவுளைத் தந்தையாகவும், மனித குலத்தில் சகோதரத்துவத்தை மேலோங்கச் செய்வதே’ பிரம்ம சமாஜத்தின் தலையாய கொள்கையாகும். மேலும் மோகன்ராய் மனிதர்களிடையே அன்பு செலுத்த வேண்டும் மற்றும் சிலை வழிபாட்டை நிறுத்தி, கோயில்களில் பிரசாதம் வழங்குவதையும், விலங்குகளை பலி கொடுப்பது போன்ற பிற சடங்குகளை நிறுத்த வேண்டுமென்று போதித்தார்.
பிரம்ம சமாஜ் மூலம், சமூகத்தில் நிலவிய கணவரின் இறப்புக்குப் பின்னர், மனைவி அவரின் சிதையில் உயிருடன் விழ வேண்டுமென்ற ‘சதி’ என்னும் உடன்கட்ட ஏறும் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க எண்ணினார். அவரது முயற்சிகளின் விளைவாக 1833ல், அப்போது ஆட்சியிலிருந்த லார்ட் வில்லியம் பென்டிக் ஒரு சட்டம் இயற்றி அதன் மூலம் சதி முறையை ஒழித்தார்.
ஆங்கிலேயே அரசு 1823இல் இந்தியா பத்திரிகைகளுக்கு எதிராக "பத்திரிகை கட்டுப்பாடு" சட்டத்தை கொண்டு வந்தது. அதை எதிர்த்து தனது பார்ஸீ வார பத்திரிகையில் பல கட்டுரைகள் எழுதினார். இதன் விளைவாக 1835 இல் இந்தியா பத்திரிகைகள் மீதிருந்த கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தியது ஆங்கில அரசு.
முகலாய பேரரசரின் ஒரு தூதராக ஐக்கிய ராஜ்யத்திற்குப் பயணித்தார். பின்னர் அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக செப்டம்பர் 27, 1833 அன்று இங்கிலாந்தில் பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் காலமானார்.
Comments
Post a Comment