வள்ளலார்

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய" என்று பாடியவர் வள்ளலார் மற்றும் பிறர் துன்பம் கண்டு உருகுபவர்.  சிதம்பரத்தை அடுத்த மருதூரில் இராமையா பிள்ளை சின்னம்மையார் தம்பதியருக்கு 1823ம் ஆண்டில் ஐந்ததாவுது குழந்தையாக பிறந்தவர் வள்ளலார். இராமலிங்கம் என்பது இவரின் இயற்பெயர். பிற்காலத்தில் இராமலிங்க அடிகள், வள்ளலார், அருள் ஜோதி, ஞான ஒளி, திருஅருட்பிரகாசம் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். 

உருவ வழிபாட்டுக்கு மாற்றாக தீப ஒளிச்சுடரை வழிபடும் முறையை அறிமுகம் செய்தவர் வள்ளலார் மற்றும் எல்லா உயிர்களிடத்தும் பரிவு காட்டுவதே இறையுணர்வு பெறுவதற்கு வழி என்று முன்வைத்தவர். இவர் தனது ஆன்மிக மற்றும் சமூக செயல்பாடுகளுக்கு சன்மார்க்க சங்கம்,  சன்மார்க்க சத்திய தருமச்சாலை மற்றும் சன்மார்க்க சத்திய ஞான சபை என்ற அமைப்புகளை துவங்கினர். 

சன்மார்க்க சங்கம்

1865 இல் ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற ஆன்மிக சங்கத்தை தொடங்கினர். இதன் நோக்கம் தனது ஆன்மிக கருத்துக்களை மக்களிடையே எடுத்து செல்வதாகும். கடவுள் ஒருவர். ஒருவராகிய அந்தக் கடவுளை உண்மை அன்பால் ஒளி (ஜோதி) வடிவில் வழிபட வேண்டும்.  இதன் அடிப்படை கொள்கைகள், 

  • சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது. 
  • கடவுள் ஒருவரே, அவரை ஜோதி வடிவில் வழிபட வேண்டும்.
  • புலால் உணவு உண்ணக்கூடாது
  • சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது
  • இறந்தவர்களை புதைக்க வேண்டுமே தவிர எரிக்கக்கூடாது. கருமாதி, திதி போன்ற சடங்குகளைச் செய்யக்கூடாது.
  • எல்லா உயிர்களையும் தம் உயிர் போல என்னும் ஆன்மநேயம் வேண்டும். 
  • எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
  • ஏழைகளுக்கு பசி ஆற்றுதல்.

சன்மார்க்க சத்திய தருமச்சாலை

1867 ஆண்டு வாக்கில் கடுமையான பஞ்சம் நிலவியது. இங்கு விளைந்த உணவு பொருட்கள் எல்லாம் இங்கிலாந்துக்கு ஏற்றுமதியானது. பருவமழையும் பொய்த்து போனது. பஞ்சம் தலைவிரித்தாடிய இடங்களில் நிலவரிகளைத் தள்ளுபடி செய்ய ஆங்கில அரசுக்கு விருப்பமில்லை. அதேசமயம் ஏற்றுமதிக்கு குறைந்த வரியும்  இறக்குமதிக்கு அதிகவரியும் விதிக்கப்பட்டது. 

இந்த பஞ்சத்தால் ஏற்பட்ட ஏழைகளின் பசி துயரத்தை கண்டு உருகிய வள்ளலார் 1867 இல் "சமரச வேத தரும சாலை" என்ற அமைப்பை தொடங்கினார். இதற்க்கு சமூகத்தின் பலமட்டங்களிலும் இருப்பவர்களை இணைத்து தரும சாலைக்கு இலவசமாக நிலம் வாங்கினார். 

இந்த தருமச்சாலையின் பிரதான நோக்ககம் சாதி, மதம், இனம் மற்றும் மொழி வேறுபாடு இல்லாமல் வருபவர்களுக்கு பசி ஆற்றுவதாகும். இன்றளவும் இந்த தருமச்சாலை வள்ளலார் பெயரில் இயங்கிவருகிறது.

வள்ளலார் புலால் உண்பதை எதிர்த்தார் மற்றும் புலால் உண்ட பலரை வள்ளலார் மீட்டார். வடலூர் சேரிக்குடியிருப்பில் அமாவாசை என்ற சேரியின் தலைவர் இருந்தார். அவரை அழைத்து இறந்த மாடுகளைத் தின்னாமல் புதைக்கும்படி வள்ளலார் சொன்னார். அமாவாசையும் அப்படியே செய்து புலால் உண்பதை கைவிட்டார். 

சன்மார்க்க சத்திய ஞான சபை

1872 இல் "வேத சன்மார்க்க சத்திய ஞான சபை" என்ற வழிபாடு சபை வள்ளலாரால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் ஜோதியின் ஒளி கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்டு அதை வழிபடுவது போல் உருவாக்கப்பட்டிருக்கும். சபையில் வழிபட எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் புலால் உண்ணக் கூடியவர்கள்சபைக்கு வெளியே இருந்து வழிபடவேண்டும். மத்தளம், நாதசுரம் போன்ற இசைக் கருவிகள், தூப தீபங்கள் போன்ற ஆராதனைகள், சோறு, தேங்காய், பழங்கள் போன்ற நைவேத்தியங்கள், திருநீறு போன்ற பிரசாதங்கள் என்று ஏதும் இல்லாத வழி பாட்டு முறையை வகுத்தார் வள்ளலார்.

உண்மை அறிவை மறைக்கும் கோபம், காமம் மற்றும் ஆணவம் முதலிய திரைகள் விலகினால் மனிதன் சத்திய ஜோதியை தனக்குள் கண்டு கொள்ளலாம் என்பது இதன் தத்துவம்.

இந்த மண்ணில் சமூக சீர்திருத்தங்களை நமது கலாசாரத்திற்கு ஏற்ப  முன்னெடுத்தவர்கள் ஆன்மிகவாதிகளே.



Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்