ஷண்மதம்

இந்து மதத்தில் பல வழிபாட்டு முறைகளும் சமயங்களும் இருக்கின்றன. எட்டாம் நூற்றாண்டில் (கி.பி.788-870) வாழ்ந்த ஆதி சங்கரர் இந்து மதத்தில் பரவிக்கிடந்த வழிபாட்டு முறைகளையும் நெறிமுறைகளையும் சீர்படுத்தி ஆறு சமயங்களாக தொகுத்தார். இந்த ஆறு சமயங்களே ஷண்மதம் எனப்படுகிறது. இப்போது நாம் வரையறுக்கும் இந்து மதம் என்பதும் கூட சங்கரரின் ஆறு சமயங்களின் தொகுப்பே ஆகும்.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே மற்றவை எல்லாம் மாயை என்ற அத்வைத தத்துவத்தை தொகுத்தவர் சங்கரர். அத்வைதியான ஆதி சங்கரர் தான் நிறுவிய அத்வைத தத்துவத்தையும் மற்றும் சமய கொள்கைகளையும் பரப்ப பாரத தேசம் முழுவதும் மடங்களை நிறுவினார். அவர் வகுத்த ஷண்மதங்கள் முறையே 

  • சைவம்
  • வைணவம்
  • காணபத்தியம்
  • கௌமாரம்
  • சௌரம்
  • சாக்தம்

எனப்படுகிறது. பிற்காலத்தில் இதில் சைவமும் வைணவமும் பிற சமயங்களை விழுங்கிவிட்டன(அல்லது இணைத்து கொண்டன). அதில் சௌரம் வைணவத்துடனும் கௌமாரம், காணபத்தியம், சாக்தம் போன்ற சமயங்கள் சைவத்துடனும் சேர்ந்துவிட்டது.

சைவம்

சிவபெருமானை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபடுவது. இப்படி வழிபடுபவர்கள் சைவர்கள் என அழைக்கப்பட்டனர். இதற்குள் பல சைவ உட்ப்பிரிவுகள் உள்ளன. இந்தியா முழுவதும் பரவலாக சைவர்கள் காணப்படுகிறார்கள்.

சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், பன்னிரு திருமறைகள், பதினான்கு சாத்திரங்கள் போன்றவைகளாகும்.

வைணவம்

மகா விஷ்ணுவே(திருமால்) பரப்பிரும்மம் எனும் சித்தாந்தம் உடையது. அவர் ஒருவரே எல்லாம் என மகாவிஷ்ணுவை வணங்குபவர்கள் வைஷ்ணவர்கள்.

இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம, வராஹ புராணங்கள் ஆகும்.

காணபத்தியம் 

அதாவது கணங்களுக்கெல்லாம் தலைவரான கணபதியை (வினாயகர்) வழிபடுவது. இத்தகையோர் காணாபத்தியர் எனப்பட்டனர். கணபதி வழிபாடு இப்போது சைவ சமயத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது.

இச்சமயத்தின் முக்கிய நூல்கள் கணபதி உபநிடதம், கேரம்ப உபநிடதம், சுப்ரபேத ஆகமம் , விநாயகர் கவசம், விநாயகர் அகவல், கணேச பஞ்சரத்தினம், கணேச புராணம்,முத்கலபுராணம்,மகா நிர்வாண தந்திரம், வெற்றி வேட்கை, பிள்ளையார் கதை, முத்தவினாயகர் திருவிரட்டை மணிமாலை போன்றவையாகும்.

கௌமாரம்

முருகப்பெருமானே(சுப்பிரமணியன்) தெய்வம் என்கிற வழிபாடு. இத்தகையோர் கௌமாரர்கள் என அழைக்கப்பட்டனர். முருக வழிபாடும் இப்போது சைவ சமயத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது.

திருமுருகாற்றுபடை, கந்தர்அநுபுதி, திருபுகழ், கந்தர்களிவெண்பா, சண்முக்கவசம், குமரவேல்பதிற்றுபத்தந்தாதி, சஷ்டிகவசம் முதலியன இச்சமய பார்க்கப்படுகிறது.

சௌரம்

சூரியனை முழு முதற் வழிபடுகடவுளாகக் கொள்வது சௌர சமயமாகும். பேரொளி வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சம கருத்தாகும். இப்படி வழிபட்டவர்கள் சௌரர்கள் எனப்பட்டனர்.

சாக்தம் 

பெண் உருவில் இருக்கும் சக்தியை (அம்மன், அம்பாள்) தெய்வமாக வழிபடுபவர்கள். இவர்களுக்கு சாக்தர்கள் என்று பெயர். இந்தியாவில் கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் சக்தி வழிபாடு தீவிரமாக காணப்படுகிறது.

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்