வைசேஷிகம்

அணுக்களின் சேர்க்கை அல்லது கூட்டு மூலமே இப்பிரபஞ்சமும் அதில் உள்ள எல்லா பொருட்களும் உருவாகின என்பதே வைசேஷிக தத்துவமாகும். இன்றைய நிகழ் உலகில் அணுக்கொள்கையானது அறிவியல் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. அறிவியலும் அணுக்கள் இணைவு(Nuclear Fusion) மற்றும் அணுக்கள் பிணைவு(Nuclear Fission) மூலமே பொருட்கள் உருவாகுகின்றன என்கிறது. அணுக்களின் கூட்டாக பொருட்களை பார்க்கும் பார்வை பழைய காலம் முதலே இருந்து வந்துள்ளது.

கிரேக்க சிந்தனையாளர்கள் எபிகுரஸ்(கிமு 341-271), டெமாகிரிட்டஸ்(கிமு 460-380) போன்றார் அணுக்கொள்கையை பற்றி தங்களது தத்துவங்களை உருவாக்கியுள்ளனர். அதேபோன்று இந்தியா ஞான மரபிலும் வெகு காலம் முன்பே அணுக்கொள்கை பற்றிய கருத்து இருந்திருக்க வேண்டும். அதிலிருந்த இந்த தர்க்கபூர்வமான வைசேஷிக தரிசனம் உருவாகியிருக்க வேண்டும். வைசேஷிகத்தின் மூல குரு கணாதர் என்னும் ரிஷியாகும் மற்றும் இவர் கிமு ஆறாம் நூற்றாண்டிலோ அல்லது கிமு பத்தாம் நூற்றாண்டிலோ வாழ்ந்திருக்கலாம். இதுவும் சாங்கியம் போன்று பௌதிக தரிசனமாகும்.

வைசேஷிகம் ஒவ்வொரு பொருட்களை பகுத்து பகுத்து பகுப்பாய்வு செய்தால் நுண் அணுக்களே இறுதியில் மிஞ்சும் என்கிறது. அதேபோன்று வைசேஷிகம் தனது தத்துவத்தை தர்மம் எது என்று விளக்கும் போது. எதிலிருந்து எல்லா விஷயங்களும் உருவாகினவோ அதுவே தர்மம் என்கிறது. அந்த தர்மத்தை அறிதல், பொருள்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரபஞ்ச இயக்கம் பற்றியும் தனது திரவியம்(பொருள்), குணம்(இயல்பு), கர்மம்(செயல்), சாமான்யம்(பொதுத்தன்மை), விஷேசம்(சிறப்புத்தன்மை), சமவாயம்(இணைவுத்தன்மை) என்ற ஆறு தத்துவங்கள் மூலம் வைசேஷிகம் விளக்குகிறது.

பிரபஞ்சத்தை அறிந்து கொள்வதற்கு இரு வழி முறைகள் உள்ளன. அவை தொகுத்தல் மற்றும் பகுத்தல் ஆகும். தொகுத்தல் என்பது கிடைத்த ஒவ்வொன்றையும் கூட்டி இது என்ன என்று யோசித்தால். பகுத்தல் என்பது கைக்கு கிடைத்த பொருளை பகுப்பாய்வு செய்தலாகும்.

வைசேஷிகமும் சாங்கியம் போன்றே பிரபஞ்சம் பொருட்களால் ஆனது என்கிறது. ஆனால் இரண்டிருக்கும் உள்ள வித்தியாசம் என்பது பிரபஞ்சத்தை பகுப்பாய்வு செய்வதில் வேறுபடுகிறது. சாங்கியமானது எல்லா பொருட்களையும் தொகுத்து நமது பிரபஞ்சம் ஆதி இயற்கையில் இருந்து தோன்றியது என்கிறது. ஆனால் வைசேஷிகம் இதற்க்கு நேர் எதிராக பொருள்களை பகுத்து பார்ப்பது போல பிரபஞ்சத்தை பகுத்தால் அணுவே மிஞ்சும் என்கிறது.

இந்த நுண் அணுக்களின் சேர்க்கையில் இருந்தே நீர், நிலம் மற்றும் புற வயத்தில் நாம் பார்க்கும் பொருட்கள் எல்லாம் உருவாகி இருக்கின்றன என்கிறது வைசேஷிகம். அதேபோல் அணுக்களுக்கு நிறம், குணம், வடிவம், கனம் உண்டு என்கிறது மற்றும் அணுக்கள் இணைந்து உருவாகும் பொருட்களுக்கும் அணுக்கள் போன்றே பண்புகள் இருக்கும் என்கிறது. ஆனால் அணுக்களில் இருந்த அதே பண்புகள் பொருட்களாக பரிணமிக்கும்போது இருக்க அவசியம்மில்லை என்கிறது வைசேஷிகம்.

அணுக்கள் சேர்ந்து பொருட்கள் உருவாகுவதை காரணம் காரியம் என்கிறது. வைசேஷிகம் சாங்கியத்தை போன்றே காரண காரியத்தை ஏற்கிறது. ஆனால் சாங்கியதின் காரியத்திற்குள் காரணம் ஒழிந்து இருக்கிறது என்ற கோட்பாட்டை வைசேஷிகம் மறுக்கிறது. காரியத்திற்குள் காரணம் ஒழிந்திருக்க முடியாது, காரணம் வேறு காரியம் வேறு என்கிறது வைசேஷிகம். அணுக்களின் சேர்க்கையினால் ஒரு புதிய பொருள் உருவாகுகிறது. இரு அணுக்களின் சேர்க்கை என்னும் காரணத்திலிருந்து பிறந்த புதிய பொருள்தான் காரியம் என்கிறது வைசேஷிகம்.

அணுக்கள் ஏன் ஒன்றாக இணைய வேண்டும்? அணு சேர்க்கை நடைபெற காரணம் என்ன? அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? என்று கேள்விகள் எழும்போது. அதை வைசேஷிகம் கண்ணனுக்கு தெரியாத உந்து சக்தி என்கிறது.

அதேபோன்று வைசேஷிகம் இப்பிரபஞ்சம் பிரம்மத்தில் இருந்து தோன்றியது எனில் நாம் காணும் பொருட்களின் தன்மையான பருத்தன்மை மற்றும் மாறும் தன்மை போன்றவை பிரமத்திற்கும் இருக்கவேண்டும். ஆனால் அருவ சக்தியான பிரம்மத்திற்கு அணுக்கள் தன்மை இருக்க வாய்ப்பில்லை. எனவே பிரம்மத்தையோ அல்லது கடவுள் இருப்பையோ வைசேஷிகம் ஏற்பதில்லை.

ஆதி சங்கரர் இந்த பௌதிக வைசேஷிக தரிசனத்தை தர்க்கரீதியாக விவாதித்து உடைக்கிறார். முதல் கேள்வி, அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? இதற்க்கு சங்கரர் பதில் அளிக்கும்போது அந்த உந்து சக்தியை பிரம்மம் என்கிறார் மற்றும் அந்த பிரம்மமே எல்லாம் என்கிறார். 

இரண்டாவுது கேள்வி, அணுக்களுக்கு உள்ள குணங்கள் பொருட்களாக மாறும்போது அணுக்களின் குணங்கள் மறைகிறது என்கிறது வைசேஷிகம். அப்படியென்றால் பிரம்மத்தின் குணங்கள் பிரபஞ்சமாக மாறும்போது மறைகிறது என்று வாதிட்டு பிரம்ம இருப்பை உறுதி செய்கிறார் சங்கரர். நாம் காணும் பிரபஞ்ச பொருட்கள் எல்லாமே மாயை என்றும் பிரம்மமே மெய் என்கிறார்.

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்