நியாயம்

எந்த ஒரு தத்துவம் அல்லது சிந்தனைக்கும் தனக்கேயுரிய தர்க்க முறை இருக்கும் அதன் சிந்தனைகளை வகுத்து கொள்ள. அப்படி இந்திய ஞான மரபு வளர்த்து எடுத்த தர்க்கமுறைதான் நியாயம் ஆகும். நாம் தினமும் பயன்படுத்தும் நியாயம் என்ற வார்த்தை கூட இந்த நியாய தரிசனத்தில் இருந்து தோன்றியது தான். நியாயம்  வைசேஷிகத்தின் உப தரிசனமாகும் மற்றும் இதுவும் பௌதீகவாத தரிசனமாகும்.

பின்னர் வந்த தரிசனங்களும் நியாய தரிசனத்தை உள்வாங்கி கொண்டு தர்கரீதியில் விவாதித்து தங்களது சிந்தனைகளை வளர்த்தெடுத்தன. இந்த நியாய மரபுக்கு எதிராக வந்த வேதாந்தமும் சரி, பௌத்த மற்றும் சமண மரபுகளும் சரி நியாய தருகத்தையே கையாளுகின்றன. இதை பின்னர் பெரிய அளவில் வளர்த்தெடுத்தவர்கள்  பௌத்தர்களே. நியாயத்தை இந்தியத் தர்க்கவியல்(Indian Logic) என்றும் அழைக்கலாம். இந்த நியாய தரிசனத்தை தொகுத்தவர் கௌதமர் ஆகும் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டை சார்ந்தவராக இருக்கலாம்.

பிரபஞ்சம் அணுக்களால் ஆனது என்னும் வைசேஷிக கோட்பாட்டை நியாயம் ஏற்கிறது. பிரபஞ்சத்தை பற்றிய அறிவு இல்லாமையால்தான் நாம் சமநிலை இழந்து வியப்பு, பயம், மகிழ்ச்சி மற்றும் துக்கம் போன்றவை உருவாகுகின்றன. இந்த அறியாமையை அகற்றி இப்பிரபஞ்சத்தை புரிந்து கொண்டால் சமநிலை அடையாளம். அவ்வாறு அடையும் சமநிலையை நி:ஸ்ரேயஸம் என்று கூறுகிறது. நியாயத்தை பொறுத்தவரை பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை விட அதை அறியும் வழியை எப்படி வகுத்து கொள்வது என்பதுதான் அதன் நோக்கமாகும். 

நியாயம் ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள விஷயம்(அறிபடு பொருள்) மற்றும் விஷயி(அறிபவன்) என்ற இரு முனைகளை கணக்கில் கொள்கிறது. இவ்விரு முனைகளுக்கு இடையே உள்ள உறவே அறிவு எனப்படுகிறது. விஷயம்(பிரபஞ்சம்) மற்றும் விஷயி(மனிதன்) என்ற இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள எல்லா வகை தொடர்புகளையும்(உறவுகளையும்) கணக்கில் கொள்கிறது நியாயம்.

பிரபஞ்சத்தை பற்றி அறிந்து கொள்ள அல்லது அது பற்றிய அறிவை வகுத்து கொள்ள பிரமாணம், பிரமேயம், சம்சயம், பிரயோஜனம், த்ருஷ்டாந்தம், சித்தாந்தம், அவயவங்கள், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டாவாதம், ஹேத்வ ஆபாசம்,சலம், வாத நிரசனம், நிக்ரஹ ஆஸ்தானம் என்ற பதினாறு தத்துவங்கள் மூலம் நியாயம் விளக்குகிறது. இதில் பிரமேயம் மட்டும் அறிபடுபொருள் மற்ற பதினைந்து முறைகளும் அதை அறிவதற்கான வழிமுறைகள்.

இதில்வரும் முதலாவுது அறிவதற்கான  முறை பிரமணமாகும். ஒரு அறிபடு பொருளை என்னென்ன வழிமுறைகள் கொண்டு அறிகிறோம் என்பதே பிரமணமாகும். பிரமாணம் ஒரு விஷயத்தை பற்றி அறிய நான்கு பிரமாணங்களை வகுக்கிறது. அவை, 

  • பிரத்தியட்சம் - நேரடிக்காட்சி
  • அனுமானம் - உய்த்துணர்வு
  • உபமானம் - ஒப்பீடு
  • சப்தம் - உரைச்சான்று என்பனவாகும்

பிரத்தியட்ச பிரமாணம் என்பது நமது புலன்கள் வழியாக புற வயத்தில்(உலகத்தில்) நடப்பவற்றை நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளுதல்.

இரண்டாம் பிரமாணம் அனுமானம் என்பது ஊகித்து அறிவதாகும். புலன்களில் மூலம் அறிதலில் சில தவறுகள் ஏற்படலாம். உதாரணத்துக்கு சூரியன் பூமியை சுற்றுகிறது என்பது போன்று நமது புலன்களுக்கு தென்படுகிறது. ஆனால் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பதை நாம் ஊகித்தே அறிகிறோம். இவ்வாறு ஊகித்து அறிந்து கொள்ளும் முறையே அனுமானம் எனப்படுகிறது. அனுமானத்தை நியாயம் மூன்று வகையாக வகைப்படுத்துகிறது அவை பிரத்தியட்சம் நிகழும் முன் ஊகிப்பது, 
பிரத்தியட்சம் நிகழ்ந்த பின் ஊகிப்பது, பிரத்தியட்சம் நிகழும் போதே ஊகிப்பது என்பவையாகும்.

மூன்றாம் பிரமாணம் உபமானம் என்பது ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு அறிவதாகும்.
 
நான்காவது பிரமாணம் சப்தம் என்பது முன்னறிவு அல்லது மரபான அறிவு என்று வரையறுக்கலாம். ஒரு விஷயத்தை நாம் அறிந்து கொள்ளும் முன் அதுவரைக்கும் அதை பற்றிய விவரங்களை தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டிருப்பது முன்னறிவாகும். அதிலிருந்து அறிபடு பொருளை பற்றி நாம் அறியலாம்.

இதுவரை இந்தியா ஞான மரபில் தோன்றிய பௌத்தம், சமணம் மற்றும் வேதாந்தங்களும் உண்மையை அறிவதற்கு நியாய தரிசனத்தையே கையாளுகின்றன.

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்