பெண் ஏன் அடிமையானாள்?
எப்போது ஒரு சமூகம் நிலவுடைமையில் இருந்து முதலாளித்துவம் நோக்கி நகருகிறதோ அப்போது அச்சமூகத்தில் நிகழும் பிற மாற்றங்களுடன் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் சம உரிமையும் தானாகவே நிகழும். மேற்கத்திய தொழிற்புரட்சி மற்றும் பிரெஞ்சு புரட்சிக்கு பின்புதான் பெண்ணியம் என்ற வார்த்தையும், பெண்கள் உரிமை சார்ந்த போராட்டங்களும் வலுப்பெற தொடங்கின. உலகம் முழுவதும் நடைபெற்ற பெண்ணிய போராட்டங்களை First Wave Feminism(1848 - 1920), Second Wave Feminism(1963 - 1980) மற்றும் Third Wave Feminism(Post Feminism - 1980 to present) என்று மூன்று கால அளவுகளில் வகைப்படுத்துவார்கள். இப்பெண்ணிய போராட்டங்கள் மேற்கத்திய தொழிற்புரட்சியின் தொடர்விளைவேயாகும்.
ஆனால் தமிழ் நாட்டில் பெண்ணிய விடுதலைக்கு பெரியாரும் திராவிடமும் தான் காரணம் என்றரீதியில் கட்டமைக்கிறார்கள். பெரியார்தான் காரணம் என்றால் டெல்லி மற்றும் மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் பெண்கள் முன்னேற்றம் அடைந்தது எவ்வாறு? பெரியாரா அல்லது அங்கு நிகழ்ந்த தொழில்துறையின் வளர்ச்சி காரணமா? அதேபோன்று தமிழ் நாட்டில் சென்னையில் இருக்கும் பெண்களின் சுதந்திரமும் நிலவுடமை செறிந்த தென்மாவட்டங்களில் பெண்களின் சுதந்திரமும் ஒரே மாதிரிதான் இருக்கிறதா? ஆக முதலாளித்துவம் வளர வளர பெண்களுக்கான கட்டுப்பாடுகள் உடைந்து அவர்களுக்கான சுதந்திரம் தானாக கிடைக்கும். அதேபோன்று பெரியார்தான் இங்கு பெண் விடுதலையை பேசியவர் என்று பாரதியாரை இருட்டடிப்பு செய்வார்கள். பெரியாருக்கு முன்பே ராஜாராம் மோகன்ராய் மற்றும் பாரதியார் போன்றார் பெண் விடுதலை பற்றி பேசியுள்ளனர்.
பெரியார் தனது பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலில் பெண் அடிமைத்தனத்தையும் மற்றும் உரிமைகளையும் பேசியுள்ளார். அந்நூலில் உள்ள கருத்துக்களின் மீதான சில விமர்சனங்களை இங்கு முன்வைக்கிறேன்.
முதலில் பெரியார் பார்வையில் காதல் என்பது காமம், மோகம், ஆசை என்று இருவரின் தேவைகள் சார்ந்தது என்கிறார். காதல் என்ற ஒன்றில் மாட்டிக்கொண்டு ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்கா முடியாது. எனவே தனது உணர்ச்சிகளை இயற்கையாக மனம் போன போக்கில் விடுங்கள் என்கிறார். சுய ஒழுக்க கட்டுப்பாடு இருப்பதால்தான் மனிதன் மனிதனாக இருக்கிறான். இல்லையேல் அவன் ஐந்தறிவு ஜந்து.
ஒருவன் எவ்வாறு தனக்கு பிடித்த உணவு மற்றும் பலகாரத்தை ஒவ்வொரு ஹோட்டலில் சாப்பிடுவது போல் என்று மனித உணர்ச்சிகளை உணவுடன் ஒப்பிடுகிறார். மனித உணர்ச்சிகளை உணவுடன் ஒப்பிடுவது மனிதனை ஐந்தறிவு மிருகத்துடன் ஒப்பிடுவதற்கு சமம். உணவும் காமமும் ஒரே அளவுகோலில் வைத்து பார்க்க வேண்டியவையா?
விபச்சாரம் என்பது ஆண் பெண் யார் செய்தாலும் தவறு தவறுதான், அவர்கள் விபச்சாரிகளே. ஆனால் பெரியாரின் கவலை என்ன என்பது இச்சமூகம் பெண்ணை மட்டும்தான் விபச்சாரி என்கிறதே தவிர ஆணை சொல்வதில்லை என்பது மட்டுமே. பல உறவு மற்றும் விபச்சாரம் என்பது தவறல்ல.
குழந்தை திருமணம் - நாகம்மையை குழந்தை திருமணம் செய்துகொண்டவர் பெரியார். சரி அவர் திருமணம் செய்துகொள்ளும் போது அவருக்கு விவரம் தெரியவில்லை என்று வைத்து கொள்ளவோம். ஆனால் தனது தங்கை இறந்தபிறகு தங்கை மகளுக்கு 10 வயத்தில் திருமணம் செய்து வைக்கும்போது. அதை எதிர்த்தாரா பெரியார்? இல்லை தாய்மாமாவுக்கு தெரியாமல் திருமணம் நடந்ததா?
கர்ப்பத்தடை - பெண்களின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பது கர்ப்பமே. அதனால் பெண்கள் அடியோடு குழந்தை பெறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்கிறார். இதுதான் சமூகத்திற்கு அறிவுரை வழங்கும் முறையா? பெரியார் சொன்னபடி பெண்கள் மனித இனஉற்பத்தியை இடைமறித்து, எந்த தலைமுறையிடம் தனது உரிமை குறித்து பேசப்போகிறது?
பெண்களின் விடுதலைக்கு தடையாக இருப்பது இச்சமூக குடும்ப அமைப்பே காரணம். ஆதலால் பெண்கள் அக்குடும்ப கட்டமைப்பை உடைத்து வெளிவர வேண்டும் என்கிறார். ஒரு பெண்ணிற்கு சமூக பாலியல் சுரட்ணல்களிலிருந்து ஓரளவு பாதுகாப்பு தருவது நமது குடும்ப அமைப்பே ஆகும். அந்த கட்டமைப்பை உடைத்து வெளிவந்த பெண்ணின் மீது சமூகத்தால் தொடுக்கப்படும் பாலியல் சுரண்டலை தடுப்பதற்கான வழி என்ன? அதற்க்கு பெரியாரின் உபாயம் என்ன?
பெண்கள் சொத்துக்காக அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறிவிட்டு மணியம்மையை 40 வயது வித்தியாசத்தில் செய்து கொண்டார்.
இப்போது பெரியாரின் பாணியில் யோசித்து மணியம்மை பெரியாரிடம் எவ்வாறு தாம்பத்திய உறவில் திருப்தி அடைந்திருக்க முடியும் என்று கேள்வி வைத்து. அப்படி அவர் திருப்தி அடையவில்லை என்றால். ஒன்று பெரியார் மணியம்மையின் உணர்ச்சிகளுக்கு இடமளித்திருக்க வேண்டும்(இன்னொரு உறவு வைத்து கொள்ள அனுமதிருக்க வேண்டும்) இல்லை மணியம்மையின் உணர்ச்சிகளை சுரண்டலுக்கு உட்படுத்தும் ஆண் ஆதிக்கவாதியாக பெரியார் இருந்திருக்க வேண்டும்.
எவர் ஒருவர் தான் சொன்ன கருத்துக்களுக்கு ஏற்றவாறு தனது வாழ்வில் வாழ்ந்து காட்டுகிறாரோ அவரே சமூக சீர்திருத்தவாதி என்று அறியப்படுவார். இல்லையேல் அவரது கருத்துக்கள் வெறும் எழுத்துக்களாகவே பார்க்கப்படும்.
Comments
Post a Comment