மார்க்சிசமும் அத்வைதமும்

மார்க்சிசத்தில் alienation(அந்நியப்படுதல் ) என்ற தத்துவம் உண்டு. சமூகம் நிலவுடைமையில் இருந்து தனிச்சொத்துடைமை(முதலாளித்துவம்) நோக்கி நகரும்போது அங்குள்ள பாட்டாளிவர்க்கம் தனது வாழ்க்கை தேவைகளுக்கு உடல் உழைப்பை மட்டும் கட்டாய மூலதனமாக குடுத்து தான் உருவாக்கும் உற்பத்தி பொருட்களிலிருந்து முற்றிலுமாக அந்நியப்படுத்தப்படுகிறார்கள். 

உற்பத்தி, மூலப்பொருள் மற்றும் உபரி உற்பத்தி இவற்றில் எதிலுமே உழைக்கும் வர்க்கத்தின் உறவுகள் இல்லாமல் அந்நியப்படுத்தப்படுகிறது. ஆனால் தனிச்சொத்துடைமைக்கு முந்திய நிலவுடமை சமூகத்தில் ஒரு கைவினை பொருளை தயாரிக்கும் ஒருவன் அப்பொருளின் மூலதனம், பொருளை உருவாக்கும் செய்முறை மற்றும் விற்றல் என்று தானே சுயத்துடன் ஈடுபட்டு அந்த பொருட்கள் உடனான முழு உறவும் மற்றும் வேலை நிறைவும் பெறுகிறான்(work satisfaction). ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் மனிதன் தனது சுயம், படைப்பு திறன் மற்றும் ஆர்வம் இவற்றில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு அவன் வெறுக்கும் வேலையை வெறும் பிழைப்புக்காகச் செய்ய வேண்டிய கட்டாயத்திருக்கு உட்படுத்தப்படுகிறான். அதுமட்டும் அல்லாமல் இயந்திரமயமாக்களில் முந்தைய சமூகங்களைப்போல் அல்லாமல் உற்பத்தி செய்முறையின் ஒரு பகுதியில் மட்டும் அவன் ஈடுபடுகிறான். அதில் மூலதனம், உற்பத்தி மற்றும் உபரி உற்பத்தி இதில் எதுவுமே தொழிலாளியின் பங்கு கிடையாது. இது ஒரு கட்டத்தில் அவனை உற்பத்தி பொருட்களிலிருந்தும், அவனது அதிக நேர உழைப்பு குடும்ப வாழ்க்கையிலிருந்தும் மற்றும் இறுதியாக industrialization or consumerism வாழ்க்கை முறை அவனை முழுமையாக தனது சுயத்திலிருந்தும் அந்நியப்படுத்துகிறது.

மார்க்சிசம் இந்த alienation(அந்நியப்படுதல்) லிருந்து விடுபட பொருள்முதல்வாத அடிப்படையிலான சமூக புரட்சியை முன்வைக்கிறது. இந்த சமூகப் புரட்சியின் நோக்கம் மனிதனின் சுயத்தை உணரவைத்தல் மற்றும் அவனின் வாழ்க்கை தேவைகளுக்கான வளங்களை உருவாக்குவதாகும்.

இங்கு சங்கரரின் அத்வைத வேதாந்தம்  மேற்கத்திய மார்க்சிச alienation தத்துவத்தோடு ஒத்துப்போகிறது. அத்வைத தத்துவத்தின்படி ஜீவாத்மா தனது சுயத்தை மறந்து பிரபஞ்சம் தோற்றுவித்த மாயா சூழலில் சிக்கி துன்பங்களுக்கு ஆளாகிறது என்கிறது. 

ஜீவாத்மா தனது சுயத்தை மறந்து தன்னை தனது பூத உடலுடன் அடையாளப்படுத்தி கொண்டு தனக்கு தனித்தன்மை இருப்பதாக உணர்கிறது. அதுவே அதனை குரோதம், காமம் மற்றும் மோகம் போன்ற துன்பங்களுக்கு உள்ளாக்குகிறது.

அத்வைதம் இதற்க்கு ஆன்மிக அடிப்படையிலான தீர்வை வழங்குகிறது. பிரபஞ்ச மாயையில் இருந்து விடுபட முதலில் தனது சுயத்தை உணரவேண்டும்(self realise) என்கிறது. எப்போது ஜீவாத்மா தனது சுயத்தை உணர்ந்து தன்னை தானே பிரம்மம் என்று உணர்கிறதோ. அதுவே மோச்சத்திற்கான(Liberation) வழி என்கிறது. 

மார்க்சிசம் தொழிலாளி தனது சுயத்தை இழந்து உற்பத்தி உறவுகளில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு முதலாளித்துவத்தின் நுகர்வு கலாச்சாரம் அல்லது தொழில்துறை அமைப்புமுறையில் சிக்கி உழல்கிறான் என்கிறது. அத்வைதமும் ஜீவாத்மா தனது சுயத்தை இழந்து பிரபஞ்சம் உருவாக்கும் மாயையில் சிக்கி உழல்கிறது என்கிறது. இரண்டும் முன்வைக்கும் பிரச்சனை ஒன்றே ஆனால் அதன் தீர்வுகள்தான் வேறு.

பரமாத்வாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத கோட்பாடே உலகில் உள்ள அனைத்து உயிர்களும்(அவற்றுடன் கடவுளும்) சமம் என்னும் சமூக சமத்துவத்தை விதைக்கும் முதல் சிந்தனையாகும்.

மானுட சமத்துவத்திற்கும், விடுதலைக்கும், பொது நீதிக்கும் போராடிய விவேகானந்தர், நாராயண குரு, அய்யா வைகுண்டர், சட்டம்பி ஸ்வாமிகள், சகஜானந்தர் போன்ற துறவிகள் வேதாந்திகளே மற்றும் அவர்கள் பெற்ற சமூக விடுதலைக்கான சிந்தனைகள் வேதாந்தங்களில் இருந்தேயாகும்.


Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்